நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் !

    

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தென் மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கும் (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.