திருக்கோவில் ஆதார வைத்தியசாலை செயற்பாடுகள் இன்று வழமைபோல் முன்னெடுக்கப்படும் !


கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று (28) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி அம்பாறை – திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார். இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது.

வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.