சபாநாயகருக்கும் தென் கொரியா ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவருக்குமிடையில் சந்திப்பு !


தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்குமிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுங் சியுங்-யுன்,

கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த சட்டம் என்றும், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத்தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய ஆதரவளிக்கும் நாடுகளுடன் இணைந்து இதனை செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக, தென்கொரியாவில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் செயன்முறை, விசாரணை நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் லீ பீம் சியோக், பிரதிப் பணிப்பாளர் மூன் ஜோங்பில், உதவிப் பணிப்பாளர் செல்வி லீகாயோன், இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.வை.கே. உடுவெல மற்றும் டபிள்யு.எம்.டி.டீ. பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.