வீட்டுக்கான வாடகையை எனது சம்பளத்தில் அறவிடவும் : கெஹெலிய ரம்புக்வெல்ல !


கண்டியிலுள்ள உத்தியோக பூர்வ இல்லத்திற்கான வாடகையை தமது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்திலிருந்து அறவிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடித மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீடு ஆர்ப்பாட்டத்தின் போது தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.இதன் பின்னர் அவர் தற்காலிகமாக வாடகை அடிப்படையில் அரசாங்கத்தின் கண்டி மலபார் வீதியிலுள்ள மத்திய மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை வாடகைக்குப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வீட்டை பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தில் நூற்றுக்கு 10 வீதம் அறவிடும் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அவர் அதனை பெற்றுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் சுற்றாடல் அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில், அமைச்சின் செயலாளர் மூலம் மேற்படி வாடகை நிதி மத்திய மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அந்த நிதி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த வகையில் மத்திய மாகாண சபை அந்த பணத்தைப் பெற்றுத் தருமாறு, பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கு பதில் அளித்திருந்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், மாதிவெலவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகளுக்கு பணம் அறவிடும் அதிகாரம் மட்டுமே தமக்கு உள்ளதாகவும் வெளியில் உள்ள வீடுகளுக்கு அவ்வாறு பணம் அறவிடும் அதிகாரம் தமக்கு கிடையாது என்றும் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் முன்னாள் அமைச்சர் அதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ள நிலையில், அந்த பணத்தை அறவிட முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.