நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும் பூஞ்சை தோல் நோய் நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களின் தொடுதலினாலோ அல்லது ஆடைகளை அணிவதாலோ இந்நோய் தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
மேலும் இந்த நோய்த் தொற்றுக் காரணமாகத் தோல் சிதைவு, வறட்சி, சிவத்தல், அரிப்பு, எரிதல் மற்றும் ஒட்டும் தன்மை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், கிரீம்கள், மாத்திரைகள் என்பவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் ஏனைய தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நோய் தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் சுகாதார பழக்க வழங்கங்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சுத்தமாக இருத்தல், ஈரப்பதத்தை தவிர்ப்பது, மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.