பெரியகல்லாறு பிராந்திய வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் திறந்துவைப்பு

  ரவிப்ரியா
பெரியகல்லாறு பிராந்திய வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஞா.சஞ்சய் தலைமையில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனால் செவ்வாயன்று மாலை திறந்துவைக்கபட்டது.
சமூக அமைப்புக்களாலம் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களாலும் சம்பிரதாயபூர்வமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்  மாலையணிவித்து வரவேற்கப்பட்டு தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் என்.கமல்ராஜ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்கள் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து பணிப்பாளர் வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளைப் பார்வையிட்டதுடன் விடுதிப் பராமரிப்பு பற்றி திருப்தி தெரிவித்தார்.
தொடர்ந்து சமூக அமைப்புக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை உரையாற்றிய வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஞா.சஞ்சய் பின்வருமாறு குறிப்பிட்டார்.
நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் எமது மாவட்டத்தில் முதற் தடவையாக இங்கு ஆரம்பித்து வைப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கின்றது. எமது பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரனால் கல்முனை  வடக்கு ஆதார வைத்தியசாலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த மையம் எமது மாவட்டத்தில் எமது வைத்தியசாலையில் முதற்தடவையாக அவர் கரங்களாலேயே  அரம்பித்து வைக்கப்படுவது பெருமைதரும் விடயமாகும்.
இதன்மூலம் இங்கு சுகாதாரத்துறை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தெளிவாக ஏற்படும். அத்துடன் அவர்கள் போதிய தகவல்களை இந்த மையத்தின் மூலம் பெற்றுக்கொண்டு நேர பண மற்றும் சிரமங்களையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். தங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் அவர்கள் இங்கு அதற்கான தெளிவை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி செய்யப்பட்டிருக்கின்றது.
இங்கு முக்கியமாக மேலதிக சிகிச்சைகளுக்கான ஆலோசனை வழங்கல், குடும்ப வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகத்திற்கான சட்ட ஆலோசனை வழங்கல், நோயாளிகளின் முறைப்பாடுகள், குறைபாடுகளுக்கான தீர்வை உடன் வழங்கல், மன அழுத்தம், போதைவஸ்து பாவனையிலிருந்து விடுபட உளவியல் சிகிச்சைகளை ஏற்பாடு செய்தல், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான ஆலோசனைகளைத் தெளிவுபடுத்தல் போன்ற சேவைகளை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் மரணத்திற்குப் பின்னரான செயற்பாடுகளிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கல், பிரேத ஊர்தி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தல், நோயாளியைப் பராமரிப்பதற்கான ஆளணி தொடர்பான தகவல்களை வழங்குதல்,  தங்களது உறவினர்களடைய நோய் நிலைகள் மற்றும் உபயோகிக்கும் மருந்து தொடர்பான பூரண ஆலோசனைகளை வழங்கல் என்பனவற்றை இங்கு பெற்றுக் கொள்வதுடன் நோயாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே நம்பிக்கையான சுமூக உறவு நிலைக்கவும். வீண் சந்தேகங்களை களையவும் அதன்மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கவும் இதுவழி வகுக்கும் என்பது எனது நம்பிக்கை என்ற குறிப்பிட்டார்.
நான் இன்னும் 25 வருடங்கள் இந்த சேவையில் நீடிக்கவே விரும்புகின்றேன். எனவே என்னை நான் எப்போதும் திருத்திக் கொள்வதற்கே தயாராக இருக்கின்றேன்.
எனவே என் சேவையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை என்னிடம் எவ்வித தயக்கமுமின்றி நேரடியாக சுட்டிக்காட்டலாம். இந்த மையத்தில் அல்லது எழுத்துமூலமாக முறைப்பாடு செய்யலாம். எனது மேலதிகாரிகளிடமும் என்னைப்பற்றி முறைப்பாடு செய்யலாம் என தெரிவித்தார்.
இவ் வைத்தியசாலை சிகிச்சைக்கு சவாலாக அமைந்த இரத்த பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதங்களை தவிர்ப்பதற்கும் தினமும் அறிக்கைகளைப் பெறுவதற்கும் நடவடிக்கைகளை மேற் கொண்ட பணிப்பாளருக்கு விசேடமாக தனது நன்றியையும தெரிவித்துக் கொண்டார்.
மாவட்டட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனதுரையில் இங்கு வித்தியாசமான வரவேற்கத்தக்க அணுகுமுறைகளை கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும். சிறந்த முகாமைத்தவத்துடன் கூடிய ஒன்றிணைந்த சேவைகளில் இங்குள்ள உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் மேற் கொள்வதை தான் அவதானித்ததாகவும். சிறந்த பௌதீக வளத்துடன் கூடிய இந்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை தான் ஏற்கனவே மேற்கொண்டு விட்டதாகவும் தற்காலிக குறைபாடுகளை துரிதமாக நிவர்த்தி செய்வதாகவும் இவ் வைத்தியசாலை பற்றிய தீவிர அக்கறையை கொண்ட சமூக அமைப்புக்களை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் சஞ்சய் எதையும் தெளிந்த சிந்தனையுடன் விடாமுயற்சியுடன் சரியாக மேற் கொள்வதை சுட்டிக்காட்டிய அவர் அவரது சிறந்த முகாமைத்துவ பண்புகள் இவ் வைத்தியசாலையின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்யும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.  
வைத்திசாலையோடு இணைந்து செயற்படும் தன்னார்வ தொண்டர்களுக்கு (இளைஞர்களுக்கு) விசேடமாக பணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அத்துடன் சமூக அமைப்பு சார்பாகவம் மற்றும் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று தேறிய ஒருவரின் உறவினர் சார்பாகவும் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் பற் சிகிச்சை டாக்டரின் அர்ப்பணிப்பான சேவைக்கும் அவரால் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.