கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !


ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை 83,000 கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு இருக்கின்றன.

2024 ஆம் ஆண்டு மாதம் ஒன்றுக்கு 60,000 கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது விநியோகிக்கப்படுகின்ற சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக எலக்ட்ரானிக் கடவுச்சீட்டு வழங்க மேற்கொண்ட முயற்சியின் செயற்பாடு தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது.

இந்த முறையை அறிமுகப்படுத்தும் வரை மக்களுக்கு சாதாரண கடவுச்சீட்டை வழங்க வேண்டும். அதனை சாதாரணமாகவும் தொடர்ந்தும் வழங்க முடியாத நிலை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இலக்ட்ரோனிக் கடவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்தும் வரை அரசாங்கம் கடவுச்சீட்டுக்கலுக்கான விண்ணப்பங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்க வேண்டும்.

இதுவரை நாளொன்றுக்கு 2000 கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க வேண்டி இருந்த போதும், 900 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுகின்றது. இதனால் நீண்ட வரிசை ஏற்பட்டு பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இன்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் குடிவரவு குடியகல்வுத்திணைக்களத்திடம் காணப்படுகின்ற கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 30 000 வரை குறைந்திருக்கின்றது. ஈ-கடவுச்சீட்டு விநியோகத்தில் கொள்வனவு நடைமுறை எதனையும் பின்பற்றவில்லை.

தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு அவற்றை வழங்கி இருப்பதனால், இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளது. இதற்காக சாதாரண விலை மனுக் குரல் இடம் பெற்றிருக்க வேண்டும். அதையும் முறையாகச் செய்யவில்லை.

சாதாரண கடவுச்சீட்டுகளை அச்சிடும் நிறுவனங்களுக்கு அதனை அச்சிடுவதற்கான போதுமான தொகைகள்(oders) வழங்கப்படவில்லை. கடவுச்சீட்டுக்களுக்கான கேள்விகள் என்ன என்பது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு தெரியாதா என்கின்ற ஒரு சிக்கலும் ஏற்படுகின்றது.

அது குறித்து பிரச்சினைகள் இல்லை என்பதால் மாதத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. எனவே இந்த சிக்கலுக்கு விரைவான தீர்வு பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவை இந்த E-கடவுச்சீட்டு வேலைத்திட்டத்தில் எந்த ஒரு கொள்முதல் நடைமுறையும் இல்லாமல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருக்கின்றது.

அதனால் இந்த பிரச்சினை தற்பொழுது உக்கிரமடைந்திருக்கிறது. இவ்வாறான அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மாற்று திட்டம் இருக்க வேண்டும். அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை.

இந்த வரிசை ஏற்பட்டமைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையே பொறுப்புக் கூற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.