விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ள மானியத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு 25,000 ரூபா கொடுப்பனவும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானமெடுத்திருந்தார். அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் தேர்தல் முடிவடையும் வரை இடைநிறுத்தியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய மானியங்கள் வழங்கப்படுமானால், ஏனைய வேட்பாளர்களுக்கு அதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பை கவனத்திற் கொண்டு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனாதிபதியின் மேற்படி இத்தீர்மானத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியைக் கேட்டுள்ளது.