மட்டக்களப்பில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு !


மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில் நபரொருவரால் பராமரிக்கப்பட்டு வந்த பசுவும் கன்றுக் குட்டியும் நேற்று(28-10) இரவு கட்டிவைத்த பால் குடிக்கும் கன்றுக்குட்டி களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.

களவாடியவர்கள் அதனை பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதுடன் அதன் மீதிப்பகுதியினை அப்பகுதியில் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்று பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு வருவதாகவும் இவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.