சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் வழிகாட்டலின்கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஒஸ்டின் பெர்னாண்டோ, அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், இலங்கையில் சேவையாற்றும் பன்னாட்டு இராஜதந்திரிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி இந்நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமார, நல்லாட்சியை முன்னிறுத்தி கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்வதே இந்த கற்கைள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் எனச் சுட்டிக்காட்டியதுடன், அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை இக்கற்கைகள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புப் பங்காளியாகத் தொழிற்படவுள்ள அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சி, இலங்கையில் வெளிப்படையானதும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு தாபிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வியின் மூலம் ஆட்சியியல் மற்றும் அரச கொள்கை என்பவற்றின் தரத்தை மேம்படுத்தமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கம் கரு ஜயசூரியவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமாரவுக்கும், அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
அதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, நேர்மறையான ஆட்சியியல் மாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், அதன் ஓரங்கமாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனவும், எதிர்வருங்காலங்களில் அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை உண்மையான தலைமைத்துவம் என்பது வெறுமனே சொற்களிலன்றி, செயல்களில் தென்படவேண்டும் எனவும், இதுவரை காலமும் தான் வகித்த சகல பதவிகளிலும் அதனை மனதிலிருத்தியே செயற்பட்டதாகவும் குறிப்பிட்ட 'தேசமான்ய' கரு ஜயசூரிய, நல்லாட்சி என்பது ஆடம்பரமல்ல எனவும், மாறாக அது அத்தியாவசியமானதொன்று எனவும் தெரிவித்தார்.
'எமது நாட்டில் பொதுமக்களின் தேவைகளுக்கு அப்பால் ஊழல் மோசடிகளும், நிர்வாக முறைகேடுகளும் பெருகியிருப்பதை மிகுந்த கவலையுடன் பார்க்கிறேன். இவற்றை சீரமைத்து, ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் நோக்கிலேயே நாம் ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை ஸ்தாபித்திருக்கிறோம்' எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 21 ஆம் திகதி அமைதியான முறையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்றதாகவும், அதற்கு மறுதினம் தோல்வியடைந்த வேட்பாளர் அலுவலகத்தைவிட்டு வெளியேறியதுடன், வெற்றியடைந்த வேட்பாளர் ஆடம்பர நிகழ்வுகள் எவையுமின்றி அமைதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்த கரு ஜயசூரிய, ஜனநாயக ரீதியில் ஒரு ஆட்சி மாற்றம் மிக அமைதியான முறையில் நிகழமுடியும் என்பதற்காக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்ததாகப் பெருமிதம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி உலகநாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிய இலங்கையின் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
அதேபோன்று எதிர்வரவுள்ள பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.