உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல்ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய நாமல்ராஜபக்ஷ,
ஜனாதிபதி ராஜபக்ஷவினரை பேசி திரிவதால் ட்ரம்ப் வரியினை அகற்றப்போவதில்லை அதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கு வேலைத்திட்டமொன்றுடனான நோக்குடன் செல்லவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷத சில்வா மற்றும் டீ.வீ.ஷானக்க ஆகியோர்களால் ஆலோசனை அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றினை வழங்கியுள்ளனர். அதையாவது எடுத்துக்கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை செய்யவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் கடிதமொன்றினை அனுப்பி தபால் மூலம் பதில் ஒன்று வரும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தால் எமது நாட்டுக்கு இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகும்.
அரசாங்கம் தெளிவாக இதனை விட பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சியை அமைத்தனர்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.மீண்டும் பொய் கூறிக்கொண்டே அவர்கள் ஆட்சியை நகர்த்திக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் இன்று அது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகின்றார் அவர்களுக்கு அதிகாரம் வராமல் வேறு தரப்பினருக்கு அதிகாரம் செல்லும் சபைகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என்று 2018 ஆம் ஆண்டு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் தான் பொதுஜன பெரமுன வெற்றி ஈட்டியது அன்று நாங்கள் நாட்டுக்கு வேலைசெய்து காட்டினோம் என்ற விடயத்தினை கூற விரும்புகிறேன் எமது கட்சி நாட்டுக்கு வேலை செய்த கட்சி ஆகையால் இந்த நாட்டு மக்கள் எமக்கு மீண்டும் அதிகாரத்தினை வழங்குவார்கள் என்று நம்பிக்கை எமக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.