6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் - சாகர காரியவசம்



நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம். ஆனால் இந்த தேர்தலில் சுமார் 9 இலட்சத்து 54 ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம். 6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சிறந்த முறையில் வெற்றிப்பெற்றுள்ளது.இந்த நாட்டை பாதுகாத்தவர்கள் தான் இந்த கட்சியை நிர்வகிக்கிறார்கள்.பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி மக்களின் சிந்தனையை திரிபுப்படுத்தி தான் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொய்யை மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள்.இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனதான் சவால்களுக்கு மத்தியில் வெற்றிப்பெற்றுள்ளது என்று மகிழ்வுடன் குறிப்பிட வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த தேர்தலில் சுமார் 9 இலட்சத்து 54 ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம்.

எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளுராட்சிமன்ற நிர்வாகத்தை அமைப்பது தொடர்பி;ல் கட்சியின் அரசியல் குழு கூடி சிறந்த தீர்மானத்தை எடுக்கும். நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைய சிறந்த தீர்மானம் எடுப்போம் என்றார்.