சபாநாயகர் நடுநிலையாக செயற்படாத காரணத்தால் தான் சபை முதல்வர் முறையற்ற வகையில் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார் - சாணக்கியன் குற்றச்சாட்டு !


அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபை முதல்வர் பதவியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு சேறுபூசுகிறார். எமது பிரதேசத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசும் போது அதனை இனவாதம் என்கிறார். சபாநாயகர் நடுநிலையாக செயற்படாத காரணத்தால் தான் சபை முதல்வர் முறையற்ற வகையில் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினை குறித்து கேள்வியெழுப்பியிருந்தேன். இதனால் ஏற்பட்ட சர்ச்சையின் போது நான் இனவாதம் பேசுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சபை முதல்வரின் இந்த கருத்தை ஒருசில ஊடகங்கள் பெரிதாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தன. எமது பிரதேசத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசும் போது அதனை எவ்வாறு இனவாதம் என்று குறிப்பிடுவது. யார் உண்மையான இனவாதி என்பதை தெற்கின் பெரும்பாலான மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசாங்கத்தின் குறைகளையும், பலவீனத்தையும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டும் போது ஆளும் தரப்பால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெரும்பான்மை பலம் உள்ளது என்று குறிப்பிட்டுக் கொண்டு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்துக்கு முரணாக செயற்படுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்தது.இறுதியில் அந்த அரசாங்கத்தை மக்கள் விரட்டியடித்தார்கள் இதனை இந்த அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சபாநாயகர் நடுநிலையாக செயற்படாத காரணத்தால் தான் சபை முதல்வர் இவ்வாறு முறையற்ற வகையில் கீழ்த்தரமாக நடந்துக் கொள்கிறார்.

பிறரை இனவாதிகள் என்று விமர்சிப்பதற்கு முன்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மாகாணசபைகள் நிர்வாக கட்டமைப்பை கற்றுக்கொள்ள வேண்டும்.தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்களினால் இந்த அரசாங்கம் பலவீனமடையும் என்றார்.