அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ; ஒப்பந்தம் செய்துள்ளமையால் விலகமுடியாது - ரணில் விக்ரமசிங்க



இலங்கை அமெரிக்காவுடன் கடன் வழங்குனர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதால், அமெரிக்காவின் வரிக்கொள்கையின்போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்க ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவே கருதப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பேராசிரியர் சரத் ராஜபத்திரனா எழுதிய இலங்கையில் உலகமயமாக்கலின் கொள்கை சவால்கள் புத்தக வெளியீடு வியாழக்கிழமை பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதனபோது அங்கு இடம்பெற்ற குழுக்கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை அமெரிக்காவின் கடன் வழங்குனர் குழுவின் உறுப்பு நாடாகும். அதனால் அமெரிக்காவின் வரிக்கொள்கையின்போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அமெரிக்கா இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவின் உறுப்பு நாடு என்பதால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அதனால் அவர்கள் இலங்கையுடன் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவுடன் கலந்துரையாடி இந்த 30 சதவீத வரியை குறைத்துக்கொள்ள முடியாவிட்டால், அமெரிக்கா எமது ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவே கருத்தப்படும். எவ்வாறு இருந்தாலும் இந்த 30 சதவீத விரியை நாங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது எது பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை சர்வதேச பிணைமுறி வைத்திருப்பவர்களுக்கு அதன் கடன்களைத் தீர்க்க வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது. இருப்பினும், நமது பொருளாதாரம் சரிந்தால் இது சாத்தியமில்லை, எனவே, அெமரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்தக் கருத்தை எழுப்ப வேண்டும்.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்த அமெரிக்கா ஏற்கனவே இலங்கையை வலியுறுத்தியுள்ளது - இந்தப் பிரச்சினை அந்த பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இப்போது இலங்கையை விட வேகமாக முன்னேறி வருகி்ன்றன. ஆனால் இலங்கை தொடர்ந்து போராடி வருகிறது,

அத்துடன் , சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை உடன் இலங்கை தீவிரமாக ஈடுபட வேண்டும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, ஜப்பானின் ஆசிய-பசிபிக் மூலோபாயம் மற்றும் இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கட்டமைப்புடன் ஒத்துப்போக வேண்டும்.

குறிப்பாக இன்றைய மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை இந்த முயற்சிகளுக்குள் மூலோபாய ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்,தற்போதைய உலகளாவிய ஒழுங்கில் வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் உள்ளனர் - நாம் எங்கு நிற்கிறோம் என்பதைத் தேர்வுசெய்யும் அளவுக்கு நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர், அமெரிக்காவை கையாள்வது குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு நீங்கள் வழங்கும் ஆலாேசனை என்ன என்று கேட்டபோது, அவர்களுக்கு தெரிவிக்க என்னிடம் ஆலாேசனை இல்லை, ஏனெனில அவர்கள் எனது ஆலாேசனைகளை கேட்கமாட்டர்கள் என்றார்.