இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரித்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் என்பதில் தமக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை எனவும் இதன் விளைவுகள் இலங்கையின் தொழிலாளர்களை வெகுவாக பாதிக்கும் எனவும், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
‘விடுதலை நாள்’ என குறிப்பிடப்பட்டு 2025 ஏப்ரல் 2ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்ட உயர் வர்த்தக வரிகளை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்தபோதும், ஜூலை 9 ஆம் திகதி முதல் அதனை மீண்டும் அமலுக்குக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோரப்பட்ட வாய்ப்பை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரிவிக்கிறார்.
“இது பாரதூரமான ஒரு பிரச்சினை. இது ஒரு தேசிய பிரச்சினை. ஏனென்றால் இதன் தாக்கம் தொழிலாளர்களை விசேடமாக பாதிக்கிறது. மட்டுமல்லாது ஏற்றுமதி துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. இறுதியில் இரு மக்களையும் பாதிக்கும்.”
உலகளாவிய வரி நெருக்கடி தொடர்பிலான மாற்று தீர்வுகளை முன் வைக்கும் சமூக இயக்கம் பெயரில் ஒன்றிணைந்த 29 அமைப்புகள் உடனடி முன்மொழிவுகளை உள்ளடக்கி இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு நாளை ஒதுக்கி தருமாறு கடந்த மே மாதம் ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தது.
முதலில் அதற்காக ஜூன் 20ஆம் திகதி ஒரு நேரத்தை ஒதுக்கியிருந்தாலும் அன்றைய தினம் முற்பகற்பொழுதில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பினூடாக குறித்த சந்திப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் குறிப்பிடுகிறார். இதுவரைக்கும் அக்கலந்துரையாடலுக்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு எந்த விதமான வாய்ப்பையும் ஜனாதிபதி செயலகம் ஏற்படுத்தித் தரவில்லை.
வர்த்தக வரி குறித்த கலந்துரையாடல்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட குழுவில் எந்தவொரு தொழிலாளர் பிரதிநிதியும் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டிய தொழிற்சங்கத் தலைவர், ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் வரிக் கட்டணப் பிரச்சினையை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதி, தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு தேசியக்குழுவை அமைக்க வேண்டும் கோரிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்.