"வளமான நாடு – அழகான வாழ்க்கை" எனும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய, சகல குடிமக்களுக்கும் தேவைப்படுகின்ற சேவைகளை தத்தமது தாய்மொழி மற்றும், சைகை மொழி மூலமாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நாட்டின் தேசிய கொள்கை செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (07) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற "மறுமலர்ச்சியின் எதிர்காலப் பாதை" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட, தேசிய மொழிகள் வாரத்தின் இறுதி நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
"மொழியை வளர்ப்போம் - இதயங்களை வெல்வோம்" எனும் தலைப்பில் ஜூலை மாதம் 01ஆம் திகதி ஆரம்பமான அரச மொழிகள் தினத்திலிருந்து, ஏழு தினங்கள் நடைபெற்ற அரச மொழி வாரத்தின் இறுதி விழா பிரதமரினதும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்துகளைத் தெரிவித்த பிரதமர்,
தேசிய மொழிகள் வாரம் என்பது மொழிக் கொள்கையில் கவனம் செலுத்தி அதை அங்கீகரிக்கும் வாரம் மாத்திரமல்ல, அது மொழியின் அடையாளம், மரியாதை மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் மொழியின் தீர்க்கமான பங்கினைப் பற்றி கவனம் செலுத்தப்பட்ட ஒரு வாரமும் ஆகும்.
நீதிமன்றம், பொலிஸ், கல்வி, அரச நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகம் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களில் தமது தாய்மொழி மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்பதை ஏதேனும் ஒரு இனத்தவர் உணர்வார்களாக இருப்பின், அது வெறுமனே சேவை வழங்கல் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல.
அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த இனத்தவர் 'நாம் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, அந்நியர்களே' என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படக்கூடும். ஆகையினால் மொழியைப் பயன்படுத்தும் போது சகல மக்களுக்கும் சம உரிமையும் மரியாதையும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகையினால், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு மற்றவர்களின் மொழிகளைக் கற்கக்கூடிய பாடசாலைகள், நோயாளிகளுக்கு நமது நோய் பற்றி விவரங்களை தமக்கு மிகவும் நெருங்கிய உணர்வுபூர்வமான மொழியில் விளக்கக்கூடிய, தமக்குரிய சலுகைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வைத்தியசாலைகள், குடிமக்களுக்குப் புரிகின்ற மொழியில் நீதியை நிலைநாட்டும் நீதித்துறை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். இவை ஒன்றும் சொகுசான வசதிகள் அல்ல.
நல்லிணக்கம் மிக்க ஒரு சமூகத்தில் செயற்பாட்டு ரீதியாகவே இருக்க வேண்டிய இயல்பான நிலைமைகளாகும். 2026ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவிருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் நாட்டின் அனைத்து மொழிகளினதும் முக்கியத்துவத்தை பிள்ளைகளால் நன்கு உணரக்கூடிய விதத்திலும், மொழியை வெறுமனே ஒரு பாடம் என்பதற்கு அப்பால் சென்ற முக்கியத்துவத்துடன் கற்பிக்கும் வழிமுறைகளை உள்வாங்கப்பட்டிருப்பதின் நோக்கமும் அதுவே ஆகும் என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார,
"எமக்கிடையே பகிர்ந்து கொள்வதற்கு ஒரே விதமான கடந்த காலம் ஒன்று எமக்கு இல்லாவிட்டாலும், நாம் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொள்ள வேண்டிய எதிர்காலமொன்று இருக்கின்றது.
இந்த தேசிய மொழிகள் தினத்தில், நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையான நல்லிணக்கத்தையும் உயிர்ப்புமிக்க ஒருமைப்பாட்டையும் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றார்.
தேசிய மொழிகள் வாரத்தின் நிறைவு விழாவில், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பொன்மொழி உருவாக்கப் போட்டியின் வெற்றியாளர்களுக்கும், அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மொழித் தேர்ச்சித் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கும் பிரதமரால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினதாஸ உள்ளிட்ட அரச மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.