அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு - உடந்தையாக இருந்த இளைஞன் கைது



காலி, அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, பெட்டிவத்த பிரதேசத்தில் செப்டெம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இளைஞன் ஒருவன் அம்பலாங்கொடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பின்னதுவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, பெட்டிவத்த பிரதேசத்திற்கு செப்டெம்பர் 09 ஆம் திகதி பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இனற்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் வழக்கு விசாரணைக்காக முச்சக்கரவண்டியில் நீதிமன்றத்துக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இளைஞன் ஒருவன் அம்பலாங்கொடையில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.