ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். அரசாங்கம் தேர்தலை நடத்த தீர்மானித்தால், அதற்கான திகதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். எந்தவொரு கருத்துக் கணிப்புக்கும் எந்தவொரு பலப்பரீட்சைக்கும் முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டி, அஸ்கிரிய மகா விகாரைக்கு புதன்கிழமை (15) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அஸ்கிரிய மகா விகாரையின் அனுநாயக தேரர் நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்தடையச் செய்தோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திதான் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. அதன்மூலமே குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள். மின்சாரக் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து கொடுத்த அழுத்தமே காரணம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்த அரசாங்கத்தின் மின்சாரக் கட்டண அதிகரிப்பு முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்தது. கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கும் வரை மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பது ஒரு நல்ல விடயமாகும். இந்தப் பணியை யார் செய்தாலும், அதனால் நாட்டுக்கு நல்லது நடப்பதாக இருந்தால் அதற்கு ஆதரவளிப்போம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார். பாடசாலைக் கட்டமைப்பில் போன்ற போதைப்பொருள்கள் பரவுவதை தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நுண்ணியல் பொருளாதாரத் துறையினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காததால், இதே வழியில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்காவிட்டால், 2028இல் கடனைத் திருப்பிச் செலுத்துவது சிக்கலுக்குரியதாக மாறும் அபாயம் உள்ளது. ஆகவே, விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.