மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள்,பாலங்கள் மற்றும் போக்குவரத்து சீர்கேட்டால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் உப புகையிரத நிலையமொன்றை அமைக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் 2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் எமது வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு கிரான் பாலத்துக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உறுதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றியை கூறிக்கொள்கின்றோம்.
அத்துடன் சிறிய பாலங்களை அமைப்பதற்காக 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக கடந்த மாவட்ட அபிவிருத்துக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகவும் நன்றியை கூறிக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரையில் மக்கள் பல வசதிகள் இன்றி துன்பப்படுகின்றனர். அவற்றையும் குறை நிரப்பு பிரேரணையிலோ அல்லது அடுத்த வரவு செலவுத்திட்டத்திலோ உள்ளடக்கி அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு பஸ்தரிப்பு நிலையங்களை புதுப்பிக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலயைில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பஸ்தரிப்பு நிலையங்கள் மிக மோசமான நிலைமையில் உள்ளது. அந்த திட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடக்கப்பட வேண்டும்.
புகையிரத போக்குவரத்தில் நேரமாற்றம் தொடர்பிலும் பிரச்சினை உள்ளது. அதனை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் உப புகையிரத நிலையமொன்றை அமைப்பதற்கு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கூறப்பட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. அதனை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.
இதேவேளை படுவான்கரை மற்றும் எழுவாங்கரையை இணைத்து படகுப் பாதை சேவை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் பழுகாமம் மற்றும் களுதாவளையை இணைத்தும் படகுப் பாதை சேவையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் பல இடங்களில் பொது போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைத்துள்ளோம். இவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.