இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கு விசேட குழு நியமனம்



இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது.

குறித்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார்.

அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார்.

அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.