கடும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை !


கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும்பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

• திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

• இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

•அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.