களுதாவளையில் பாடசாலை மாணவி மற்றும் தாய் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து



மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக்கொண்டு எதிரே உள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் கடந்து சென்றவேளை தீடீரென வந்த முச்சக்கரவண்டி, தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் தாயும் பிள்ளையும் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.