மட்டக்களப்பில் உலக மனநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் !


( எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று (10) திகதி காலை மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வு நடைபயனத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே.அருள்ராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததுடன், குறித்த நடை பயணத்திலும் பங்கேற்றிருந்தார்.

கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து காலை 7:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணமானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தை சென்றடைந்தது.

இதன் போது பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்கா உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் அரசடி சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டதுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உளவள துறைசார்ந்து மிக நீண்டகாலமாக சேவையாற்றி வரும் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மாவட்ட அரசாங்க அதிபரினால் பொன்னாடை போர்த்தி, பிராந்திய சுகாதார பணிப்பாளரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன், மன நல நெருக்கடி உதவி தேவைப்படுபவர்களுக்கான தொடர்பு இலக்கங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், இஸ்டிக்கர் போன்றவை பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிமனையின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக பிரதிநிதிகள், சுகாதார துறைசார் மாணவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் உலக மனநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்

Posted by Battinews on Friday, October 10, 2025