அரிசி இறக்குமதியால் சதொசவுக்கு ஏற்பட்ட பல பில்லியன் நட்டம் !



2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு 15,157,031,018 ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் புலப்பட்டன.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக 27,011,980,142 ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், அந்த அரிசி கையிருப்பை விற்பனை செய்ததன் மூலம் 11,854,949,124 ரூபாய் மாத்திரமே வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்நாட்டு அரிசிச் சந்தை நிலைமை, நெல் அறுவடை மற்றும் அரிசிக்கான களஞ்சிய வசதிகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சதொச நிறுவனத்திற்கு சுமார் 15,157,031,018 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது.

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டதா என்று அதிகாரிகளிடம் குழு வினவியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, எதிர்காலத்தில் கடைகள் ஆரம்பிக்கும் அனுமானத்தின் பேரில், கட்டடங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது என்றாலும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 29 ஒப்பந்தங்களின் கீழ், மதிப்பீடு பெறப்படாமல், கட்டட நிர்மாணங்களுக்காக ரூபாய் 34,234,996 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக 27,435,000 ரூபாய் அறவிடுவதற்காக நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று இதன்போது புலப்பட்டது.