சுங்கம் தடுத்துள்ள உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்


சிக்கல்கள் காரணமாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் டன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்திற்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தரக் குறைப்பாடு காணப்படும் ஒரு தொகுதி உப்பை வௌியிடுவதற்கு இலங்கை சுங்கம் மறுப்பு வௌியிட்ட நிலையில் அது தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த அனுமதி கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தரக் குறைப்பாடு காணப்பட்ட உப்பை விடுப்பதற்கு சுங்கத் திணைக்களம் மறுப்பு வௌியிட்டது.

இந்த அறிவிப்பின்படி செயல்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உப்பு தொகுதி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.