பொறுப்பை முறையாக நிறைவேற்றும் அரச சேவையே நாட்டிற்கு தேவை - ஜனாதிபதி



பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டிற்குத் தேவை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தொழிலுடனும் தொழில்முறை பண்பு, திறன் மற்றும் அதனுடன் தொடர்புள்ள ஒழுக்காற்று மற்றும் பொறுப்பை முறையாக நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுடன் அரசியல் மட்டுமல்ல, அரசில் உள்ள ஒரு குழுவும் தொடர்பு பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

புதிதாக இணைந்துள்ளவர்கள் மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய மற்றும் மிகவும் தொழில்முறையுடன் மற்றும் திறமையான படையில் இணைந்திருக்கிறார்கள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்த நற்பெயரையும் கௌரவத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், தாய்நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உயர்ந்த பொறுப்பு உள்ளது.

"நமது தாய்நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பு உங்களைச் சார்ந்தது.

மேலும் நமது கடற்கரையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் உங்களிடம் (விமானப்படை) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது நமது கடற்கரையை கண்காணிப்பது மற்றும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால், சட்டவிரோத குடியேறிகள், சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சமீபத்தில், சில ஆயுதங்கள் கூட இந்த கடற்கரையிலிருந்து நமது நாட்டிற்குள் கடத்தப்படும் நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்.

குறிப்பாக இன்று, இந்த போதைப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அரசுடனும் தொடர்புபட்டு இருப்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதன் ஆழத்தையும், அதன் அளவையும் நாம் அளவிட முடியும். அந்த பேரழிவு நமது கிராமங்களுக்கு பரவி வருகிறது.

எனவே, அந்த பேரழிவைத் தடுப்பதில், நமது கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன்.

எனவே, அந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்வதும், தாயகம் மற்றும் தாயகத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உழைப்பதும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.