அனர்த்தம் எமக்கு தெரிந்த காலத்தில் இருந்து இந்தளவு பாரிய அனர்த்தம் ஏற்பட்டதில்லை ; நூற்றுக்கு 10 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - ராஜித்த சேனாரத்ன !


அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டு தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு 300 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் கைவசம் இருப்பது 120 பில்லியன் ரூபாவாகும். அதனால் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி தேர்தல் காலத்தில் தெரிவித்த விசித்திர கதையின் இரண்டாவது தொடராக இருந்துவிடக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்தம் எமக்கு தெரிந்த காலத்தில் இருந்து இந்தளவு பாரிய அனர்த்தம் ஏற்பட்டதில்லை. நாட்டு மக்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் சரியான தொகை இதுவரை கணக்கிட முடியாமல் போயிருக்கிறது. நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எமது காலத்தில் பல சந்தர்ப்பங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறும்போது, நாங்கள் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவந்திருக்கிறோம்.

அதனால் வெள்ளப்பெருக்கு, சூறாவழி, மணிசரி போன்ற அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துக்களை எம்மால் குறைக்க முடியுமாகி இருந்தது. அதேபோன்று தற்போது இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னரே வளிமண்டலவியல் திணைக்களம் இதுதொடர்பில் பல தடவைகள் எதிர்வுகூறி இருக்கின்றது.

அதேபோன்று சர்வதேச ஊடகமான சி,என்.என், எமது நாட்டுக்கு 500 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என கடந்த மாதம் 25ஆம் திகதி அறிவித்திருந்தது.

காலநிலை அவதான நிலையம் மற்றும் சர்வதேச ஊடகங்களின் எதிர்வுகூறல்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு, முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளில் நூற்றுக்கு 80 வீதம் குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செயற்பட தவறி இருக்கிறது.இதுதொடர்பில் போதிய அனுபவமின்மையே இதற்கு காரணமாகும்.

அதேநேரம் பாதி்க்கப்பட்ட மற்றும் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அதேநேரம் பாதிப்புகளுக்கு அமைய எவ்வளவு தொகை நட்டஈடாக வழகப்போகிறோம் என்ற அளவையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி அறிவித்த பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களக்கு நட்டஈடு வழங்கப்படுமாக இருந்தால், அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அறிவித்துள்ளதன் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா என்பதே எமக்குரிய கேள்வியாகும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, வழங்கப்போகும் நட்டஈட்டு தொகையை அறிவிக்கும்போது, அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆருதலாகவே இருந்திருக்கும். ஆனால் இவ்வாறு தெரிவித்துவிட்டு அந்த மக்களை ஏமாற்றிவிடக்கூடாது என்றே தெரிவிக்கிறோம்.

ஏனெனில் ஜனாதிபதி அறிவித்த தொகையை பார்க்கும்போது மரணித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள்,விவசாய நிலங்கள் கால்நடை பண்ணைகள், வியாபார நிலையங்கள்,வாகனங்கள் என அனைத்துக்குமாக மொத்தம் 300 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி தெரிவித்துள்ள பிரகாரம் அரசாங்கத்தின் கைவசம் இருப்பது 120 பில்லியன் ரூபாவாகும்.

120 பில்லியன் ரூபாவை கையில் வைத்துக்கொண்டு 300 பில்லியன் ரூபாவுக்கு வாக்குறுதி வழங்கி இருக்கிறது. தேர்தல் காலத்திலும் இவ்வாறான வாக்குறுதிகளையே அரசாங்கம் மக்களுக்கு வழங்கி இருந்தது.

அந்த விசித்திர கதைகளுக்கு ஏமாந்தே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். தற்போது அந்த விசித்திர கதையின் இரண்டாம் கட்டமே தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

என்றாலும் அன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதி, அவர்களின் வாழ்க்கைச்செலவுடன் சம்பந்தப்பட்டதாகும். ஆனால் தற்போதுள்ள வழங்கி இருக்கும் வாக்குறுதி மக்கள் இழந்தவற்றைை மீள பெற்றுக்கொடுப்பதாகும்.

அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி தொடர்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். என்றாலும் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அனர்த்தம் காரணமாக எமது நாட்டின் தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் நாட்டின் வருமானம் குறைவடைகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி அரசாங்கத்தின் இரண்டாவது விசித்திர கதையாகிவிடக்கூடாது என்றார்.