ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பேரழிவை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தி பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவை வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நிலையியற் கட்டளை 16-இன் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் தான் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் துன்பப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கிராமங்களும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளன. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, குழந்தைகளிடம் உணவு, சுத்தமான நீர் இல்லை. நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பலர் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். வெள்ள நீர் வழிந்தோடாத பிரதேசங்களில் அவற்றில் நடந்து செல்ல வேண்டிய இன்னலை எதிர்கொண்டுள்ளனர். மழை குறைந்தவுடன் தங்கள் வீடுகள் அப்படியே இருக்குமா என்ற நிச்சயமற்ற தன்மையுடன் அவர்கள் இருக்கின்றனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் பசி, நோய் மற்றும் நிச்சயமற்ற தன்மையுடன் போராடி வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் மீட்கப்படும் வரை, மற்றும் நிவாரணம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்தையும் சென்றடையும் வரை, அரசாங்கத்தின் வாக்குறுதிகள் களத்தில் நிஜமான உதவியாக மாறுவதை பாராளுமன்றம் கண்காணிக்க வேண்டும். அவை தொடர்பில் விவாதிக்க வேண்டும். உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இப்போது நமது மக்களுடன் துணை நிற்பது அரசியல் அல்ல அது நமது தார்மீகக் கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.













.jpeg)