பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா. உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா அவசரகால உதவி




டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கையில் அதன் அவசரகால நடவடிக்கையை அதிகரித்துள்ளது.

அந்த நடவடிக்கைக்குத் துணை செய்யும் வகையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய 1.5 மில்லியன் AUD நிதிப் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதரவு, உயிர்காக்கும் செறிவூட்டப்பட்ட உணவை வழங்கவும், பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண உதவி வழங்கவும் WFP-க்கு உதவுகிறது.

துபாயில் உள்ள WFP இன் மனிதாபிமான மையத்திலிருந்து 10 மெட்ரிக் தொன் எடையுள்ள செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளின் தொகுதியை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது. எதிர்வரும் நாட்களில் 67 மெட்ரிக் தொன் பிஸ்கட் தொகுதிகள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. WFP ஏற்கனவே நுவரெலியா மற்றும் கேகாலைக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை அனுப்பியுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான பதுளை மற்றும் கண்டிக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை மேலும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு நேரத்தில் அவுஸ்திரேலியா இலங்கையுடன் துணைநிற்கிறது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விரைவாக உதவியளிக்க, எங்கள் நீண்டகால மனிதாபிமான பங்காளரான WFP உடன், இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் கூறினார்.

மிகவும் தேவைப்படும் நிலையில் உள்ள குடும்பங்களுக்கு WFP இன் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் விரைவான ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன.

“மீட்புப் பணிகள் முடிவுக்கு வருவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உயிர்காக்கும் செறிவூட்டப்பட்ட உணவை வழங்குவதற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கின்றோம். குறிப்பாக ஆபத்தில் உள்ளவர்கள் - குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் இதுபோன்ற நெருக்கடிகளின் சுமைகளை அடிக்கடி எதிர்கொள்பவர்களின் உடனடி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறோம்.” என்று உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதியும் நாட்டுக்கான பணிப்பாளருமான பிலிப் வார்ட் தெரிவித்தார்.

குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா துணைசெய்யும். மேலும், அவுஸ்திரேலியாவின் பங்களிப்பு ஆனது, பண உதவித் திட்டங்களுக்கும் நிதியளிக்கவுள்ளது. திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அவசரகால நடவடிக்கைகளைத் தொடரவும், மீட்சியை துரிதப்படுத்தவும் நன்கொடையாளர்களின் கூடுதல் ஆதரவை WFP தொடர்ந்தும் கோருகின்றது.