வெள்ள அனர்த்தம் நிகழலாம்; மக்களை அவதானமாக இருக்குமாறு கூறுகிறார் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா !



இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

09.12.2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் வானிலை குறித்து நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறுகையில்,

இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், வடகீழ்ப் பருவக்காற்றுக் கொண்டு வரும் அதிக ஈரப்பதன் காரணமாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாளையும்(10.12.2025) நாளை மறுதினமும் (11.12.2025) நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் நிலப்பகுதிகள் அவற்றின் தரைக்கீழ் நீரை உறிஞ்சும் முழுக்கொள்ளளவை அடைந்து விட்டன. குளங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. சில பெரிய குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றத்துக்கான கதவுகள் இன்று பகல் திறக்கப்பட்டன (இரணைமடு).

இந்நிலையில் கிடைக்கும் மழை வீழ்ச்சி முழுவதும் தரை மேற்பரப்பில் தேங்குவதுடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தையும் உருவாக்கக்கூடும். எனவே வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கனமழை கிடைக்கும் என்பதனால் குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவுக்கான வாய்ப்புக்களும் உண்டு. நிலச்சரிவு நிகழ்வைப் பல காரணிகள் தூண்டினாலும் இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான மற்றும் கன மழைவீழ்ச்சியே காரணம்.

இலங்கையின் தென்கிழக்கே காணப்படும் காற்றுச் சுழற்சியும், தென்மேற்கே நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையும் மேலே குறிப்பிட்ட குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களுக்கு கன மழை கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்வரும் 12.12.2025 இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

தற்போது நிலவும் வளிமண்டல நிலைமைகள் காரணமாக இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும்.

உண்மையில் வழமையான பருவ மழை காலங்களில் இவ்வாறான மழை என்பது சாதாரணமானது. ஆனால் டிட்வா புயலின் காரணமாக இலங்கை முழுவதும் மிகக் கனமழை கிடைத்துள்ளதனால் இனி வரும் நாட்களில் கிடைக்கும் கனமான மழை கூட (75 மில்லிமீற்றர் முதல் 125 மில்லிமீற்றர் ) சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது.

மத்திய மலை நாட்டில் இன்றும் கூட சில சில பகுதிகளில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் இடம்பெறுகின்றன. பல பிரதேசங்களில் கிடைத்த கனமழை காரணமாக மண்ணியல் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலும் சற்று கனமான மழை கிடைத்தாலே அது நிலச்சரிவு நிகழ்வைத் தூண்டும்.

அத்தோடு எதிர்வரும் 15ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார்.