
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.
எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார்.









.jpg)


.jpeg)