
வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் வறிய நாட்டையும் ஏழ்மையான வாழ்க்கையையும் உருவாக்கி வருகின்றது. அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் தவறான செயலாகுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
விசேட காணொளியொன்றை வெள்ளிக்கிழமை (02) வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போதைய அரசாங்கம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே ஆட்சிக்கு வந்தது. ஆனால், வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, தற்போதைய அரசாங்கம் வரிய நாட்டையும் ஏழ்மையான வாழ்க்கையையும் உருவாக்கி வருகின்றது. அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
கடந்த தேர்தல்கள் பிரச்சார மேடைகள் ஒவ்வொன்றிலும் தற்போதைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களாக 9000 ரூபா மின்சாரக் கட்டணத்தை 6000 ரூபாவாகவும், 3000 ரூபா மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் 33 சதவீதத்தால் குறைப்போம் என வாக்குறுதியளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் மேடைகளில் பிரஸ்தாபித்த வாக்குறுதிகளை மறந்து, தற்போது மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பெற்ற மக்கள் ஆணையை இன்று காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
மின்சாரக் கட்டணங்களை குறைப்பதாகக் கூறியதால்தான் பெரும்பான்மையான மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஜனாதிபதி இதை பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
ஆனால் இன்று, மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வந்துவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை ஏன் இவ்வாறு காட்டிக் கொடுத்து வருகின்றீர்கள் என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். நாட்டில் மின் பாவனையாளர்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது.
ஆளும் தரப்பினர் மின் பாவனையாளர்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளையும், அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையும் முற்றிலுமாக மீறியுள்ளனர். பொய்கள் மற்றும் வாக்குறுதிகளை மீறல் என இந்த அரசாங்கம் மின்சாரத்தை நுகரும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி, இன்று அவர்களை உதவியற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டின் நிபந்தனைகளை மக்களுக்கு சாதகமான முறையில் மாற்றுவோம் என்று மேடைக்கு மேடை கூறிய மக்கள் விடுதலை முன்னணியினர் ஆட்சிக்கு வந்ததும், மக்கள் மீது மிகுந்த அழுத்தங்களையும் ஏற்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் உடன்பாடுகளை உள்ளவாறே முன்னெடுத்தும் அமுல்படுத்தியும் வருகின்றனர்.
தித்வா சூறாவளியின் பாதிப்புகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கம் இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மின்சாரக் கட்டணங்களை இவ்வாறு அதிகரிக்கத் தயாராகி வருகின்றது. இந்நடவடிக்கை பெற்ற மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் தஹவறான செயலாகும். ஆகவே இந்தத் தவறான செயலை தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, 33 சதவீதத்தால் குறைப்போம் என்று மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஆணையை இந்தளவு மீறும் அரசாங்கத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீது எல்லையற்ற அழுத்தத்தை திணிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.




.jpg)
.jpeg)

.jpeg)
.jpg)



.jpeg)