
அரசாங்கம் முறையான கலந்துரையாடல்கள் இன்றி தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இது ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர் இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுகிறார். அதற்காகவே அவர் பழிவாங்கப்படுவதாக சந்தேகிக்கிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நேற்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுக்கு எவ்வித எழுத்துப்பூர்வமான அறிவித்தலும் இன்றி, தொலைபேசி அழைப்பின் மூலமே குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம் இங்கே மீறப்பட்டுள்ளது.
அவர் ஏன் அழைக்கப்பட்டார் என்ற தெளிவான காரணம் எமக்குத் தெரியவில்லை. அவருடன் சட்டத்தரணிகள் குழுவொன்றும் முன்னிலையாகியுள்ளது. தற்போதைய அரசாங்கம் முறையான கலந்துரையாடல்கள் இன்றி தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இது ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் இலங்கையின் இலவசக் கல்வி முறைமை அழிக்கப்படுகிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு தன்னிச்சையான செயலாகும். கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும். பிரித்தானியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட கல்வி மற்றும் சுகாதாரம் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் கல்வி முறைமை அநாகரீகமான நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மிகிந்தலை நாயக்க தேரர் போன்ற மதத் தலைவர்கள் கல்வி குறித்து கருத்து தெரிவிக்கும் போது அரசாங்கம் அவர்களை விமர்சிப்பது தவறானது. ஜனாதிபதிக்கு கௌரவப் பட்டம் வழங்கும் போது அவர்கள் நல்லவர்களாகவும், அரசாங்கத்தின் குறைகளைச் சொல்லும் போது கெட்டவர்களாகவும் தெரிவது இரட்டை வேடமாகும். பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர் இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுகிறார். அதற்காகவே அவர் பழிவாங்கப்படுவதாக சந்தேகிக்கின்றோம்.
தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளது. இதற்காக புதன்கிழமை (நாளை) ஒரு புதிய களத்தை அமைக்கவுள்ளோம். இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தை 9 மாகாணங்கள், 25 மாவட்டங்கள் மற்றும் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் கொண்டு சென்று, பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து ஒரு பாரிய மக்கள் போராட்டமாக மாற்றுவோம் என்றார்.



.jpg)








