ரணிலை மீண்டும் பாராளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து !



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை. ஆனால் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு வீழ்ச்சியடைந்தால் அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டாரென எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக அரசாங்கத்தின் முகாமைத்துவ திறன் இன்மை, அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக்கள் இன்மை, அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் கூறுவதைக் கேட்டு செயற்படாத நிலைமை, மறுபுறம் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குதல் போன்றவை குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான நிலைமையில் நாடு முன்னோக்கிச் செல்வது மிகவும் கடினமாகும். எனவே இந்த பிரச்சினைகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாவிட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடாகவுள்ளது. இவ்வாறான நிலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி மறுசீரமைப்புக்கள் என்ற போர்வையில் கலாசாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலைமைகளைக் கருத்திக் கொண்டு பாராளுமன்றத்துக்கு செல்லுமாறு இன்றும் நாம் அவரை வலியுறுத்தினோம். எனினும் அவர் புன்னகைத்து அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பாரதூரமான நிலைமைகள் உருவாகி தேவையேற்படின் அவர் தனது பொறுப்புக்களை தட்டிக்கழிக்க மாட்டார். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு வீழ்ச்சியடைந்தால் அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சிக்கிடையில் சிறந்த சாதகமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேர்மறையாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். அடுத்து தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் இரு குழுக்களும் ஒன்றிணைந்தே களமிறங்கும் என்றார்.

புதிய ஜனநாயக முன்னணியின் சுகீஸ்வர பண்டார கருத்து வெளியிடுகையில், இவ்வாண்டு பல்வேறு அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெறக் கூடிய ஆண்டாகும். இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாததன் காரணமாக இவ்வாண்டு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

2025ஆம் ஆண்டு இவ்வரசாரங்கத்துக்கு தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரேயொரு செயற்பாடு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே. மாறாக பொருளாதார வளர்ச்சிகளோ சமூக மேம்பாடுகளோ அவதானிக்கப்படவில்லை என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளின் சகல தலைவர்களுக்குமிடையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. எதிர்காலத்தில் நாம் இணைந்து வெற்றிகரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போம். னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை வழிகாட்டுதல்களுக்கமைய எமது வெற்றிப் பயணம் தொடரும் என்றார்.