பொலிஸாரை கண்டு தலைமறைவாகும் பழக்கம் எமக்கு இல்லை - நாமல் ராஜபக்ஷ



இரண்டரை இலட்சம் ரூபாவுக்காக ஐந்து பொலிஸ் குழுவை அமைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.பொலிஸாரை கண்டு தலைமறைவாகும் பழக்கம் எமக்கு இல்லை.வரச்சொன்னால் செல்வோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (02) வெலிசர நீதிமன்றத்துக்கு சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்டத்தை தமக்கு ஏற்றாட்போல் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதிமன்றம் மீது எமக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.இரண்டரை இலட்சம் ரூபாவுக்காக ஐந்து பொலிஸ் குழுவை அமைத்து தேடுதல்

நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.

அழைப்பு விடுத்தால் அவர்கள் வருவார்கள். நாங்கள் எக்காலத்திலும் பொலிஸை கண்டு ஓடி தலைமறைவாகவில்லை. வர சொன்னால் சென்று வாக்குமூலம் வழங்குவோம்.

அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் வெளியாகும் போது அரச அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது என்றார்.