பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.


.webp)

.jpeg)







