சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தொழிற்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புனித குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் அல்ல. மாறாக எமது சமூகத்தில் இருக்கும் ஒருசிலரின் நிர்ப்பந்தமே காரணம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.அதனால் இவ்வாறான விடயங்களை சரி செய்வதற்கே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதனால் இவ்வாறு கூறுவதைவிட அந்த குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இதுதொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை நடத்த இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த கலந்துரையாடலை விரைவாக நடத்தி, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அத்துடன் இந்த குர்ஆன் பிரதிகள் தடுத்துவைக்கப்பட்டதில் இருந்து அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற எந்த விடயமும் எங்களுக்கு தெரியாமலே இருந்தது. என்றாலும் தற்போது இதுதொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்தமை தொடர்பில் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அதேபோன்று மன்னார் இலவன்குலம் பாதையை திறப்பது தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த பாதை விரைவில் திறக்கப்பட வேண்டும். அதற்காக அமைச்சர் எடுத்துவரும் முயற்சிக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.











.jpg)
