எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச லண்டன் பயணம் !


இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் ஆரம்பமாகியுள்ளது.

லண்டன் பௌத்த விஹாரையின் 100வது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்யும் நிகழ்வை முன்னிட்டு அவர் தனது இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, அவரது வருகைக்கு எதிராக திட்டமிடப்பட்ட போராட்டங்கள் காரணமாக, அவரது உரை ரத்து செய்யப்பட்டதாக கேம்பிரிட்ஜ் ஒன்றியம் தெரிவித்ததாக நாமலின் அலுவலகம் அறிவித்திருந்தது.

இருப்பினும், ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் அவர் ஆற்றவிருக்கும் உரையும், இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்துடனான பல சந்திப்புகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சி ஆர்வலர் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் நாமலுடன் இங்கிலாந்துக்கு செல்கின்றனர்.