பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் - சாமர சம்பத்




பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக நான் திருத்மொன்றை முன்வைப்பேன். 1994ஆம் ஆண்டில் ஜே.வி.பி கட்சி ஊடாக பாராளுமன்றம் வந்த கலப்பதி உள்ளிட்ட இதுவரையில் 72 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளனர். ஆளும் தரப்பில் முன்வரிசையில் இருப்பவர்களில் பலர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டவர்களே. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொண்ட ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பணத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதேவேளை எங்களை திருடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியில் தலங்கம வட்டாரத்தில் போட்டியிட்ட ஒருவரின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி நிறுவனமொன்றை நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பெற்றுள்ளனர். இவர்களின் திருமணத்தில் ஜனாதிபதி அனுரகுமாரவே கையெழுத்திட்டுள்ளார். இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளை அடகு வைத்து அவர்களிடம் பணம் கொடுத்தவர்களும் உள்ளன. இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பில் பொலிஸ் அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். நீதியமைச்சரின் உறவினரான வாசுதேவ நாணயக்கார இன்றும் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுகிறார். ஆகவே மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றார்.