நாட்டின் பல இடங்களில் மழை


வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

களுத்துறை தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.