கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை முறையாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்குத் தொடரின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தி நேற்று நடைபெற்றது. இதனை 'கல்விச் சீர்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம்' ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக:
"கல்விச் சீர்திருத்தச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்காக, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 23,304 பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும். அதன் பின்னர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
தற்போதைய சாதாரண தர முறைமை இதேபோன்று தொடரும், ஆனால் புதிய பாடத்திட்ட மேம்பாட்டுடன் அதன் வடிவம் மாற்றமடையும். இந்தச் செயல்முறையின் கீழ் மதிப்பீட்டு முறைகள் அமல்படுத்தப்படும். குறிப்பாக எமது நாட்டைப் போன்ற நாடுகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவுகள் காரணமாக சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். இது குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
ஆங்கிலப் பாட நெறியில் காணப்பட்ட சில குறைபாடுகளை நாம் திருத்த வேண்டியுள்ளது. பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட காரணத்தினாலேயே அத்தகைய விடயங்கள் பாடப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணமானவர்களுக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பாடப்புத்தகங்கள் தொடர்பாகவும் நிபுணர்கள் ஊடாக ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தரத்திலிருந்து மீண்டும் கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை ஆரம்பிப்போம்.
2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த மாற்றத்திற்கு 6 ஆம் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயாராக இருந்தனர். அந்த மாணவர்களுக்கு 7 ஆம் தரத்திலிருந்தாவது இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை அரசியல்வாதிகளாகிய நாம் தீர்மானிக்க முடியாது. கல்வியியலாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், 2027 இல் 7 ஆம் தரத்திலிருந்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியுமா என்பதை ஆராய்வோம். இந்தச் சீர்திருத்தச் செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நிபுணர்கள் மற்றும் தேவையான ஏனைய தரப்பினரை உள்ளடக்கிய குழுவொன்றை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.












.jpg)