ஓய்வூதிய நீக்க சட்டமூலம் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது - திலித் ஜயவீர குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கும் மோசமான நோக்கத்திலே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய திட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 72பேர் இருக்கிறார்கள். அவர்களின் சம்பளம் கட்சி நிதியத்துக்கே வழங்கப்பட்டுவந்தது. தற்போது அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் மனசாட்சியின் பிரகாரம் அந்த கட்சியில வெளியேறிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தற்போது பாராளுமன் ஓய்வூதியம் மாத்திரமே கிடைக்கிறது. அதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கிலே தற்போது அரசாங்கம் பாராளுமன் உறுப்பினர்களின் ஓய்தீவூதியத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.அவ்வாறு இல்லாமல் வேறு எந்த நல்ல நோக்கமும் இல்லை.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், இதனையும் விட முக்கியமான பல வாக்குறுதிகள் இருக்கின்றன. அவை எதனையும் செய்ய முயற்படாமல் இந்த விடயத்தை கையில் எடுத்திருப்பதன் நோக்கம், பழிவாங்கும் நோக்கமே தவிர, மக்களின் பணத்தை மீதப்படுத்துவதற்கு அல்ல. மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களின் பில்லியன் கணக்கான பணம் கட்சி நிதியத்துக்கு சென்றிக்கிறது. அந்த பணம் அவர்களுக்கு கிடைத்திருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் தேவைப்படாது,

அரசாங்கம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியத்தை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மோசடிகள் அதிகரிக்கலாம். ஏனெனில் தற்போது உள்ள உறுப்பினர்கள், ஒரு காலத்தில் ஓய்வுபெறும்போது அவர்களுக்கு மருந்துக்கு கூட பணம் வசதி இல்லாமல் போகலாம். அதனால் அவர்கள் தற்போது மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சி நிதியத்துக்கு பணத்தை சேகரித்து, பிற்காத்தில் அதன் மூலம் தங்களுக்கு தேவையான செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பார்கள். அதன் பிரகாரமே தற்போது நிலக்கரி மோசடி, கொள்கலன் மாேசடிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன.

இது மிகவும் பிழையான முன்மாதிரியாகும். இவர்களைப்போன்று ஏனைய கட்சிகளும் கட்சி நிதியம் ஒன்றை அமைத்தால், எதிர்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல்போகும். கட்சி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயற்பட முடியாமல் அனைவரும் அடிமைகள் நிலைக்கு செல்வார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதனை செய்யலாம். அவ்வாறு இல்லாமல் முற்றாக நீக்குவது முறையல்ல. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயக முறைமைக்கு பாரிய சவாலாகும் என்றார்.