தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் அனுஷ்டிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரான அமரர் தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) 128வது ஜனன தினம் இன்று செவ்வாய்க்கிழமை (31) பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இன்று அன்னாரது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வு வேளையில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா, தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.