கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவரத்துடன் சீனப் பயணி கைது



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), பாதுகாக்கப்பட்ட தாவர இனமான ‘கொத்தலஹிம்புடு’ 25 கிலோ எடையுடன் நாட்டை விட்டு வெளியேற முயன்ற சீன நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய அந்த நபர், China Eastern Airlines நிறுவனத்தின் MU 6018 விமானம் மூலம் ஷாங்காய்க்கு பயணிக்க வந்தபோது சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்டார்.

அந்த சோதனையின் போது, தேயிலைப் பொதிகளாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த தாவரப் பொருட்கள் பயணப்பைகளில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘கொத்தலஹிம்புடு’ தாவரம் பாதுகாக்கப்பட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அதனை நாட்டை விட்டு வெளியேற்றுவது விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்திற்கும் (Fauna and Flora Protection Ordinance) சுங்கச் சட்டத்திற்கும் எதிரானதாகும் என சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இத்தகைய அனுமதியில்லா ஏற்றுமதிகள் சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலாகக் கருதப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தாவரங்களின் மதிப்பு சுமார் ரூ. 100,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவை அரசின் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகளுடன் இணைந்து உயிரியல் பல்வகைமை மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.