மட்டக்களப்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி இருந்த நபர் கைது


மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

முகத்துவாரம், நாவலடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த நபர், வெளிநாடு அனுப்புவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியேறியபோதும், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால், அவருக்கு எதிராக 9 திறந்த பிடியாணைகள் மற்றும் 4 சாதாரண பிடியாணைகள் என மொத்தம் 13 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற பிடியாணை பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜெண்ட் கோகுலன் தலைமையிலான குழுவினர், கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் மறைந்திருந்த அவரது வீட்டை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று சனிக்கிழமை (20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், குறித்த நபருக்கு எதிராக மொத்தம் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்காக அவருக்கு பிணை வழங்கியவர்கள் தற்போது அந்தப் பிணையில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.