57 இலட்சம் ரூபாய் சீனச் சிகரெட்டுகளுடன் இரு வெளிநாட்டுப் பெண்கள் கைது !


சுமார் 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன நாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புசநநn ஊhயnநெட ஊடாக எவ்வித அறிவித்தலுமின்றி இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போது சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சீனாவின் செங்டு நகரிலிருந்து ஏயார் சீனா நிறுவனத்திற்குச் சொந்தமான ஊயு-425 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 190 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 38,000 சீன தயாரிப்பு சிகரெட்டுகள் இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீனப் பெண்கள் இருவரும் தற்போது சுங்கப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.