காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் வெளிநாட்டுப் பறவைகள் மீட்பு !


மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பிளமிங்கோ (Flamingo) இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள், வங்காலை பறவைகள் சரணாலயப் பகுதியில் அமைந்த அதிவலு காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில், ஒன்று கடுமையாக காயமடைந்து மன்னார் மாவட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சைகள் உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாகும். இந்தச் சம்பவம் வருகை தந்த பறவைகள் காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையை வெளிப்படுத்துகிறது.

பிளமிங்கோ போன்ற அரிய வெளிநாட்டு பறவைகளை நேரில் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்தப் பறவைகளை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு பறவை கடுமையாக காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.