அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அநுர குமார இன்று எங்கே? - சாகர காரியவசம் கேள்வி


இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (30) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அநுர குமார திஸாநாயக்க, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டில் விலையைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் அறவிடும் வரிப் பணத்தை நீக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

ஆனால், இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுர குமாரவின் ஆட்சியில், ஒரு லீற்றர் 92 ரக பெற்ரோலுக்கு சுமார் 134 ரூபாயும், ஒரு லீற்றர் சாதாரண டீசலுக்கு சுமார் 110 ரூபாயும் அரசாங்கத்தினால் வரியாக வசூலிக்கப்படுகிறது. உலகளாவிய யுத்த சூழ்நிலையிலும் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ள போதிலும், அன்று எதிர்க்கட்சி உறுப்பினராகப் பேசிய விடயங்களைச் செய்ய இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுர குமார தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.

அதேபோல், ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் மின்கட்டண உயர்விற்கு ஈரான் போர் தான் காரணம் என அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், இந்நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதற்கோ அல்லது மின்வெட்டு ஏற்படுவதற்கோ ஈரான் போர் காரணம் அல்ல, மாறாக அநுர குமாரவின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டின் மின்னுற்பத்தியைச் சீர்குலைத்து, டீசல் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் தயாரிக்கும் 'டீசல் மாஃபியா'வுக்கு வழிவகை செய்ததன் மூலமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சட்டக்கட்டமைப்பு இன்று முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், பொலிஸ் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உயர் பதவிகளுக்குத் தனது கட்சி உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். இதற்கு உதாரணமாக, 68 இலட்சம் ரூபா அரச பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர் குமார் ஜயகொடி ஒரு நாள் கூட விளக்கமறியலில் வைக்கப்படவில்லை என்பதையும், அதேநேரம் மிகச் சிறிய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது புதல்வர்கள் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு வெளியே சென்று எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது எனப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவானது, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் இந்தத் திசைகாட்டிக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று இந்த அரசாங்கம் கடத்தல்காரர்களினதும் குற்றவாளிகளினதும் புகலிடமாக மாறியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாகச் சீரழித்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.