ஒரு ஜனாதிபதியின் பயணங்களையோ அல்லது அவரது அன்றாட வாழ்வையோ 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' என்று கோடு போட்டுப் பிரிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து, அவர்களுக்கே வினையாக முடியும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் என்பது தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தாலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விவாதம் தொடங்கிய நாள் முதலே எமது நிலைப்பாடு என்னவென்றால், ஒரு ஜனாதிபதியின் பயணங்களையோ அல்லது அவரது அன்றாட வாழ்வையோ 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' என்று கோடு போட்டுப் பிரிக்க முடியாது என்பதாகும். ஒரு ஜனாதிபதி நாள் முழுவதும் பணியிலேயே இருக்கிறார்.
ஜனாதிபதி ஒருவர் விடுமுறையில் இருக்கும்போது கூட, அவர் அரச கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அரச தீர்மானங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, ஜனாதிபதியின் பயணம் உத்தியோகபூர்வமானதா அல்லது தனிப்பட்டதா என்ற விவாதம் தேவையற்றது. அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை செய்வது கடமைதான்.
உண்மையில், ஒரு ஜனாதிபதி தனது தனிப்பட்ட பயணத்தின் போது உத்தியோகபூர்வ வாகனத்தையோ, குண்டு துளைக்காத வாகனத்தையோ பயன்படுத்த முடியாது என்றால், அல்லது பாதுகாப்பைப் பெற முடியாது என்றால், ஜனாதிபதியின் எதிரிகளுக்கு அது மிக எளிதான காரியமாகிவிடும். உத்தியோகபூர்வ பயணங்களின் போது அமைதியாக இருந்துவிட்டு, அவர் தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் போது அவரது உயிரைப் பறிக்கத் திட்டமிடுவது மிகவும் எளிது.
எனவே, இந்த அரசாங்கம் இந்த வழக்கைத் தொடருமானால், அது தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து, அவர்களுக்கே வினையாக முடியும் என்பதைத் தடுக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழகம் ஒரு தனியார் நிறுவனம் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வாதிட்டார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டுக்கு சென்றார். உலகப் பொருளாதார மாநாடு என்பதும் ஒரு தனியார் நிறுவனமே. அப்படியானால், நமது பிரதமர் பொது நிதியைப் பயன்படுத்தி அந்தப் பயணத்தை மேற்கொண்டது, இந்த முன்மாதிரியின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஜனாதிபதி 2025 செப்டம்பர் மாதம் ஜப்பான் சென்றார். அப்போது ஜப்பானில் ஒரு இடைக்காலப் பிரதமரே இருந்தார். எனவே அந்தச் சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பாக அமையவில்லை. உண்மையில் ஜனாதிபதியின் நோக்கம் யதெனில், தேர்தலில் தனக்கு உதவிய ஜப்பானில் உள்ள இலங்கையர்களிடம் உரையாற்றுவதேயாகும். எனவே அந்தப் பயணம் ஒரு அரசியல் பயணமே தவிர, உத்தியோகபூர்வ பயணம் அல்ல.
அனுராதபுரத்திற்குச் சென்ற போதும், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை ஜனாதிபதி சந்தித்தார். அது அரசியல் சார்ந்தது. வரும் வழியில் தாயாரைப் பார்க்க வீட்டிற்குச் சென்றார். அது தனிப்பட்டது. ஆனால், அந்தப் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்புடனேயே மேற்கொள்ளப்பட்டன. அப்படியானால், இந்த வழக்கின் படி அவை அனைத்தும் சட்டவிரோதமானதாக இருக்க வேண்டும்.
எனவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவை பழிவாங்குவதற்காக நீங்கள் தாக்கல் செய்யும் இந்த வழக்கின் மூலம் உங்களது குளியை நீங்களே தோண்டிக் கொள்கிறீர்கள். ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் இருந்த நாட்களைப் போல மூன்று மடங்கு காலம் நீங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை இந்த முன்மாதிரியால் ஏற்படும் என்றார்.











.jpg)

