நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்


நீதிக்கு புறம்பான முறையில் வைத்தியர்களின் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச தெரிவித்தார்.

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மகரகம அபெக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாவிடில், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் பிரபாத் சுகந்ததாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட முடியாது எனவும், வரலாற்றில் அவ்வாறான சம்பவங்கள் பெரியளவில் இடம்பெற்றதில்லை எனவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், வைத்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அதற்கு செவிசாய்க்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.